எலிசபெத் எனும் ஃபோட்டோஷாப் புன்னகை அரசி!

ராணி எலிசெபத்தின் மறைவிற்கு பின் மன்னராட்சி குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன! 

ஆனால் நாம் ஆய்வு செய்யவிருப்பது, சற்று குறைவான பொறுப்புகள் அதிகாரங்கள் பெற்றிருப்பினும் கூட மகராணி என்கின்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளவும், மன்னராட்சியினை 21 ம் நூற்றாண்டு வரை இழுத்துக்கொண்டு சென்று வந்த ஒரு ஆளுமையாக எலிசபெத் அவர்களின் பெருமையாக கூறினாலும் அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள், நஷ்டங்கள் அவமானங்கள், இழப்புகள், தோல்விகள் என்னவென்று ஆராய முற்படின் ஒன்றுமே இல்லையெனச் சொல்லலாம்! 

ஆம் ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா! 

ஆனால் அதுவே உண்மை! 

ஒரு காலத்தில் சூரியனே மறையாத பெரும் எல்லைகளைக்கொண்ட இங்கிலாந்து அரச குடும்பம், இன்று ரப்பர் ஸ்டாம்ப் அளவினதாய் சுருங்கிச் சிறுத்துப் போய்விட்டது. 

உலகம் முழுதும் மக்களாட்சி மேன்மையடையத்துவங்கிய அதே காலகட்டத்தில் அதன் விளைவில் மன்னராட்சி வீழத்துவங்கியது. 

ஆனாலும் இங்கிலாந்தில் மட்டும் அரச குடும்பத்தினர் தங்கள் மாட்சிமை பொருந்திய மரியாதையை வெகு கவனமாக காப்பாற்றிக்கொண்டே வந்தனர். 

அதற்கு முக்கிய காரணம் ராணி எலிசபெத்தின் எவ்வித சலனமும், உணர்ச்சியும், உணர்வும், இல்லாத ஒரு முகமூடி அணிந்த சாவி கொடுக்கப்பட்ட ஒரு பொம்மை போன்ற ஒரு முக அமைப்பைக் கொண்டு, உலகமே அழிந்தாலும் சரி, தனது நாடும் வீடும் எக்கேடு கெட்டுப்போனாலும் சரி, எனக்கு அது குறித்து கருத்தோ கவலையோ இல்லை. 

எனக்கு எனது ராணி பொறுப்பையும் இந்த ராஜாங்கத்தை இழந்து விடாமல், வீழந்து விடாமல் கொண்டு செல்வது மட்டுமே எனது பணி என்கின்ற ஒரு மனநிலையில் தனது 96 வயதினில் ஏறத்தாழ 70 வயதினைக் கடத்தி ஓய்ந்து விட்டார் ராணி எலிசபெத் அம்மையார். 

ஒட்டுமொத்தமாக 5 அல்லது 6 முறை மட்டுமே திரையில் தோன்றி பேசியுள்ளார். அதிலும் இரண்டாம் உலகப்போர் காலத்திய அவரின் பேச்சும் அண்மையில் கொரோனா காலத்தில் நாம் மீண்டும் சந்திப்போம் என்று சொல்லியதும் இதற்கிடையில் நீண்ட மௌனத்தை உடைத்து ஒரு தாயாகவும் பாட்டியாகவும் என்று தன்னை சொல்லி டயனாவின் இரங்கல் குறித்து பேசியது மட்டுமே பெரும்பான்மையான மக்களுக்கு நினைவில் நின்றிருக்கும். 

இவற்றைத் தவிர ராணி எலிசபெத் அம்மையார் இது வரை உலகின் பெரும் பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் தனது போட்டோஷாப் செய்யப்பட்ட புன்சிரிப்பினையே பதிலாக தந்தார். 
இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளக்கூடியது என்னவெனில், தனது ராணிப்பட்டத்தையும் ப்ரிட்டிஷ்ஷின் மன்னராட்சியினையும் தக்க வைத்துக்கொள்வதற்கு தன்னிடம் இப்புன்னகையைத் தவிர்த்து வேரொன்றுமில்லை என்பது தான். 

தனக்கு கொடுக்கப்பட்ட வேலையினை சிறப்பாக செய்து முடித்து இயற்கையடி சேர்ந்தும் விட்டார். 

மன்னாராட்சி முறையில் ஒற்றைக் குடைக்குள் உலகத்தை அடைக்க நினைத்த இங்கிலாந்து அரசிற்கும், சர்வாதிகாரத்தின் மூலம் உலகை தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயன்ற ஹிட்லருக்கும் சற்றும் குறைவில்லாமல் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் தற்பொழுது நடைபெறும் ஆட்சிக்கும் பெரிதான வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை! 

ஒரே நாடு, 
ஒரே ரேசன்
ஒரே மொழி
ஒரே கல்வி
ஒரே கட்சி என்று ஒன்றிய அரசின் அடாவடிக் கொள்கைகள் அச்சமூட்டுபவையாக இருந்தாலும் ஆபத்து நிறைந்தவையாக இருந்தாலும் அழியப்போவதென்பது வரலாறு நமக்கு சொல்லும் உண்மை! 

ஜார்க்கண்டிலும், கோவாவிலும் இன்ன பிற மாநிலங்களிலும் எதிர்கட்சியினரை விலைபேசி வாங்கும் "ஆப்பரேசன் லோட்டஸ்" எனும் அதி பயங்கரமான ஜனநாயக விரோதத்தனமான போக்கு இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் போக்கு. 

சூரியன் மறையா எல்லை கொண்ட ராஜ்ஜியங்களே மலையேறி மண்ணாகிப் போய்விட்டது. 

குளத்துத் தாமரைகள் பாவம் ஆகாயச்சூரியனால் சுட்டெறிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை! 

வாழ்க மக்களாட்சி
வளர்க மக்கள்! 

அரசியல் குறள் 


0 comments:

Popular Posts

Blog Archive

Followers