பிரபஞ்சமென்பது பிறிதொரு ஞானம்!

காட்டுப்பாதையின்
குறுக்கால் 
ஒரு
குறும்பாதை....

இதுவரை 
யாரும் சென்றதற்கான அறிகுறியேதுமின்றி....

நீண்டு நீண்டு
சென்று கொண்டிருந்தது. 

தடம் பதித்துச் செல்ல 
செல்ல 
மெல்ல விரிந்தது 
அகன்ற கானகம்.

காரிருள் சூழ் காலம்!

பறவைகளின் ஓலமும்
சிறு மிருகங்களின் பதற்றமும் 
தொற்றிக்கொள்ள,

அச்சமூட்டும் ஒலிகளும் மிரட்சியளிக்க,

ஒற்றையடிப்பாதையில் 
உள்ளே 
செல்ல செல்ல 
என்னையே பார்க்க முடிந்தது... 

ஆழ்மனக்குகையினை 
நினைவுபடுத்தும் 
இருள் சூழ 
அங்கே 
எதையோத் தேடிக்கொண்டு 
நான்.

நான்காம் பரிமாணத்தில் 
நான் 
எனக்கே 
வேறொரு முப்பரிணாமத்தில் தெரிந்தேன். 

முக்காலமும் முட்டுச்சந்தில் உட்கார்ந்து 
தலை சொறிந்து கொண்டிருக்க 
இறந்ததும்,
இருப்பதும்,
இறக்கப்போவதும்,
இன்னும் பலவும் 
எதிரே நின்றது.... 

கடவுளாவது கத்திரிக்காயாவது...

பிரபஞ்சமென்பது 
பிறிதொரு ஞானம், 
விண்டவரும் கண்டவரும் ஒன்றெனும் ஞானம்....

@cupidbuddha #Cupidbuddha #enlightenment #bliss #ecstasy #psychedlic

முருகனைப் பார்ப்பான்...

ஸ்கந்தருக்கு ஹர் ஓ ஹரா!!!!

த்தா அது என்னடா கந்தன்?
 "ன்" விகுதில மரியாத இல்லாம என் முப்பாட்டன சொல்றீங்க.... ?

இனிமே எவனாவது கந்தனுக்கு அரோகரான்னு சொன்னா மரியாதை கெட்டுப்போயிட்டும் ரேஸ்கல்ஸ்..

"ர்" விகுதி போட்டு மரியாதையோட சொல்லுங்க 

"க"முன்னாடி  "ஸ்" போட்டாச்சுன்னா அப்படியே ஆகம விதிகளுக்குள்ளார வந்துரும் ஐயருக்கும் புரிஞ்சுரும் ஈசியா இருக்கும் மந்திரம் சொல்லுறதுக்கு..... 

ஹர ஓ ஹரா என்பதை "சீர்திருத்தி" இந்த தமிழர்கள் அரோகரா என்று சொல்லி விட்டனர்.

இந்த அநீதி மீண்டும் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டும். 

நிற்க!! 

பார்ப்பனர்களின் வேதமும் சாஸ்திரமும் சடங்குகளும் பூசைகளும் புணஸ்காரங்களும்  அவற்றின் சூதும் நயவஞ்சகமும் குள்ளநரித்தனமும் காலங்காலமாக தமிழர்களையும் மனிதர்களையும் இந்துக்கள் என்று சொல்லி பிரித்தாள முயற்சித்துத் தோற்றது. 

இப்பொழுது கந்தனுக்கு அரோகராச் சொல்லச் சொல்லி கதறுகிறது. 

ஆகம விதிகளுக்குட்பட்ட ஏதேனும் ஒரு கோயிலின் கர்ப்பகிரகத்திற்குள் சென்று, 

ஒரே ஒரு பார்ப்பானையோ அல்லது அவனுக்கு சிங்கியும் சங்கியும் அடிக்கும் ஒரு இந்துவையோ 

"கந்தர் சஷ்டி கவசமோ" அல்லது "கந்தனுக்கு அரோகராவோ" சொல்ல சொல்லுங்கள் அன்று சொல்வோம் பார்ப்பனர்கள் மட்டும் இந்துக்கள் அல்ல என்று!

காலையில் பக்திப்பிரவாகத்தில் திளைத்து பரவசத்தில் மூழ்கிட இந்தப் பாடலை கேளுங்கள்!!! 

முருகனைச் சிறு தெய்வம் என்று சொல்லும் சின்னப்பசங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்

என்னப்பனே கந்தப்பனே !!‬

போதையெனும் பெருங்கடவுள்.......

தனியாய் இருந்தபொழுது தான் தெரிகிறது இதுவரை தனியாகத்தான் இருந்திருக்கின்றேன் என்று...... 

தனிமையை சுவாசக் காற்றாய் சுவாசித்து உட்கொண்டு தான் இருந்திருக்கிறேன்,
ஒவ்வொரு நொடியும்..... 

கோமான்களிடையே, கோமாளிகளுடனே, 
என எப்பொழுதும் கூட்டத்தோடு கூட்டத்திலே இருந்தாலும் 
நான் 
தனியாகத்தான் இருந்திருக்கின்றேன்...

சுற்றிக்கடல் நீர் இருந்தாலும்  தாகத்திற்கு தண்ணீரற்று திணறியிருக்கிறேன்.... 

கடல் மீனாய்,
கிணற்றுத்தவளையாய் 
திரிந்தும் 
பறந்தும் பார்த்திருக்கின்றேன்....

தினமும் கவிதையெழுதியிருக்கிறேன்!

கவிதைகளை விட அதிகமாய் காதலித்து இருக்கிறேன்....

காதலை விட அதிகமாய் புணர்ந்திருக்கிறேன்,

புணர்தலை விட அதிகமாய் துறந்திருக்கிறேன்....

துறத்தலை விட ஏற்றுக்கொள்ளுதல் ஞானமென்றிருக்கின்றேன்..

ஞானமே உச்சகட்ட போதையென்றிருக்கின்றேன்

போதைதான் பெருங்கடவுள் என்றிருக்கிறேன்..... 

பெருங்கடவுளே நானாயிருக்கிறேன்..... 

வா என்னுடன் வந்து வாழப்பழகு...... 

வாழ்வு மட்டும் தான் அழகு!!! 
வாழ்வு மட்டுமே அழகு

"முப்பாட்டன் முருகனும் முப்பதாம் தலைமுறைப் பேரனும்"


சின்ன வயசுல திருப்பரங்குன்றம் முருகனுக்கு பால் குடம் எடுத்துட்டு போயிருக்கேன் கிட்டத்தட்ட 6 வருஷம். 

விரதம் இருக்குற சமயத்துல ஒழுங்க விரதம் இருக்காம போயிட்டா முருகன் வேல்கம்பு வச்சு கண்ண குத்திருவாருன்னு எங்கம்மா என்னைய மெரட்டும்....

பயபக்தியோட விரதம் இருந்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா, வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா என்று தினமும் அரோகரா போட்டு.... 

துதிப்போர்க்கு வல்வினை போம்,
துன்பம்போம்,
நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் 
பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், 
நிமலரருள் 
கந்தர் சஷ்டி கவசம் தனை.

அமரரிடர்தீர அமரரம் புரிந்த
குமரனடி நெஞ்சே 
குறி என்று முழு கந்தர் சஷ்டி கவசத்தை முழுங்கியவன் நான்.....

(இன்னிக்கும் almost ஒரு 90% மனப்பாடமா பாடுவேன்.)

வைகையாற்றுக்கரைக்கு அதிகாலை 3-4 மணியளவில் சென்று அங்கு நீராடி பால்குடம் எடுத்து தலையில் வைத்தவுடன் , அரோகாரா அரோகரா சத்தம், மேள தாளம்,கொட்டு, நாதஸ்வரம் என அந்த இடமே ஒரு மாதிரியான Trance நிலைக்கு சென்று புதுவகையான vibration கிடைக்கும், 

பல பேரு இதுல டான்ஸ் ஆடுவாய்ங்க அதோட ரொம்ப பேருக்கு சாமி வேற வரும், 

வேற லெவெல்ல சாமியாடுவாய்ங்க...... 

நமக்கு சாமி வரவே வராது, 

எங்கப்பா சொல்லுவாரு டே சாமியாடுடா இல்லாட்டி தலை மேல பால்குடம் வைக்கமாட்டாய்ங்க அப்படின்னு.... 

நானும் வேகமா தலையாட்டிட்டு அப்படியே லைட்டா ஆட ஆரம்பிப்பேன்...

எங்கப்பா டக்குன்னு இந்தா "சத்யாவுக்கு சாமி வந்துருச்சு" சாமி வந்துருச்சுன்னு சொல்லி பால்கொடத்த எடுத்து தலைல வைக்க சொல்லுவாரு ... 

தலைல வைக்கிறப்ப பூசாரி, அப்படியே "எச்சி தெறிக்க" அரோகராஅரோகரான்னு கத்தி, விபூதிய எடுத்து கொஞ்சம் நெத்தில, கொஞ்சம் கையில, கொஞ்சம் நெஞ்சுல, கொஞ்சம் வாயிலன்னு அப்பி விடுவாப்ல.... 

அதுக்கப்புறம் நான்லாம் வேற லெவல்ல சாமியாடிருக்கேன்...... அப்படியே திருப்பரங்குன்றம் போயி பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் செஞ்சுறுவோம். 

இது போக ஏறத்தாழ ஒரு 20-25 வருடங்களாக வைகாசி விசாகத்தன்று எங்கள் தாத்தா பெயரில் மதுரையில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு பால்குடம்| காவடி எடுப்பவர்களுக்காக  நீர்ப்பந்தல் வைத்திருக்கொண்டிருக்கின்றோம். நீர்ப்பந்தலில் விசிறி, நீர் மோர், பானக்கம், தண்ணீர், கொடுப்பது, காவடி எடுப்பவர்களுக்கு தேவையான வஸ்துக்கள், குளிர்ந்த நீர், பன்னீர் தெளிப்பது போன்று பல வேலைகள் ஜரூராக நடக்கும். 

இப்படி முப்பாட்டன் முருகனிடம் பல பக்தி மார்கங்கள் மூலம் சரணாகதி அடைந்து,

பின்னர் முருகனின் பிரபல்யம் குறைந்து சாய்பாபாக்கள், மாதா அமிர்தானந்த மயிக்கள் என பக்தி மடைமாற்றம் செய்யப்பட்ட ஒரு நல்ல வேளையில்,

நான் கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் சொல்லும் "இறைக்கும்" எனக்குமான இடைவெளியினை கூட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். 

அதற்கு பிறகு வேறு கதை!!

நிற்க!

இவ்வளவு ஒரு நீண்ட நெடிய பதிவுக்கான காரணம் என்னவென்றால்..... 

முருங்கைக்காய்க்கு "முருங்கைக்காய்" அப்படின்னு பேர் வர்றதுக்கு என்ன காரணம் அப்படின்னு ஒரு ஆராச்சியில் இறங்கியபொழுது அது "முருகன் காய்" என்று சொல்லி அதற்கு ஒரு பெரிய பின்கதை கேள்விப்பட்டேன். 

அந்தக்கதையை எழுதலாம் என்று பல நாள் முயன்று இந்த வாரம் எழுதலாம் என்று இருந்தேன். 

ஆனால் "கந்தர் சஷ்டி கவசத்திற்கும்" காப்பிரைட் மற்றும் தமிழின சிறு தெய்வமான முருகனையும் "இந்துக்கள்" சொந்தம் கொண்டாட துவங்கிவிட்டனர் என்று பதிவுகள் மூலமாக தெரிய வந்தது

எனவே முப்பாட்டன் முருகனை இந்துக் கடவுளான கார்த்திக்கிடமும் விநாயக்கிடமும், ஷிவ்ஜீ & பார்வதி ஜீயிடம் இழந்து நிற்கும் " முப்பதாம் தலைமுறைப் பேரனாய்" அந்த முருகன் காய் பற்றிய கதையை பின்னாடி ஒரு நாள் எழுதலாம் என்று மனதை தேற்றிவிட்டேன்.

சிங்கச் சித்தன்!!!

சிங்கம் சேர்த்து வைத்துக் கொள்வதில்லை,
சிங்கம் தனது தேவையை விட அதிகம் உண்ணுவதில்லை.....

ஏனெனில்
சிங்கம் தினமும் 
வேட்டைக்குப் போகும்!

சிங்கம் விட்டுச் சென்ற 
மிச்சத்தை 
நக்கிச் சாப்பிட்ட பின் 
சிறுநரிகள் 
தந்திரம் யோசிக்கும்......

எச்சில் மிச்சத்தை 
சேர்த்து வைக்கலாமா?
என்று 
திட்டம் தீட்டும்...... 

சேர்த்து வைத்ததை 
சேமிப்பு 
என்று 
பெயர் சூட்டலாமா 
என 
மூளை கசக்கும்....

எச்சில் சேமிப்பை, 
வழியற்ற 
வறிய 
சிற்றெலிகளுக்கும் 
சிறு காக்கைகளுக்கும் 
கந்து வட்டிக்குக் கொடுக்கலாமா?
என்று கனவு காணும்...

வட்டி கட்ட முடியாத 
பின் அவைகளை அடிமையாக்கலாமா 
என்று ஆலோசிக்கும்....

அப்படி 
தன்னிடம் கையேந்தும் காக்கையையும் சிறு எலியையும் தனக்கு சேவகம் செய்யவும், 
தனக்கு சாதகமாக 
பொய்யை உண்மையாகவும் 
உண்மையை பொய்யாகவும் 
திரிக்கச் செய்யும். 

சிங்கம் விட்டுச் சென்ற 
எச்சிலைத் தின்று 
தினவெடுத்த 
தந்திர நரிகள் 
சிங்கத்தையே 
கேள்வி கேட்கும்.... 

நீ ஏன் 
சரியான நேரத்திற்கு 
வேட்டைக்கு செல்லவில்லை? ஒரு நாளைக்கு 
நீ 
இத்தனை முறை 
வேட்டைக்கு செல்லவேண்டும் 
எனக் கட்டளையிட முயலும்....

நாங்கள் நக்கித்திங்க 
நீ தினமும் வேட்டைக்குப் போகவேண்டும் 
என்கின்ற 
உன்னுடைய 
பொறுப்பும் கடமையும் 
உனக்குப்
தெரிகிறதா? புரிகிறதா 
என்று 
ஏகவசனத்தில் 
பேசும்!ஏசும்! 

யதேச்சையாக நடந்தவைகளனைத்தையும் சிங்கத்தை சின்னாபின்னப்படுத்தியது போல சித்தரிக்க முயலும் 
சிறு நரிகள் கூட்டம், 

சிங்கமோ யதார்த்தமானது....

அதற்கு 
வேட்டையாட 
மட்டும் தான் தெரியும்!!!
சிறுநரிகளுக்கோ 
சிங்கத்தின் மிச்சத்தை 
நக்கித்திங்க 
மட்டும் தான் தெரியும்!

போதி மரத்துப் பௌதீகம்!!!

எனக்கென்றிருந்த ஒரு பாதியில் 
பெரும் மீதியாய் 
மிச்சமிருப்பவள் 
நீ!

உனக்கென்றிருந்த வேதியியலில் 
அணு ஆதியாய் 
சொச்சமிருப்பவன் 
நான்!

சேர்மங்களின் 
அறிவியல் மய்யம்
நான்!

ஓர்மைகளின் 
அரிச்சுவட்டு அய்யம் 
நீ!!

போதி மரத்தடியில் 
பௌதீகம் பேசுகின்ற 
இயற்பியல் 
நீ!

ஒழுங்கற்ற வனத்தில் 
ஒழுங்கு பேசுகின்ற 
இயங்கியல் 
நான்!

கலவியில் ஒழுங்கு நான்.....
விலகையில் விலங்கு நீ......

துச்சாதக் கைகள் நான்....
வற்றாத வைகை நீ!!

குற்றாலச் சீறல் நீ...
குற்றங்களின் பிள்ளை நான்!!

எட்டாத எல்லை நீ...
என்றுமுந்தன் தொல்லை 
நான்!!!

Pic Courtesy:- Nivethapethuraj

செம்பயிருக்கு வேர்.....

இந்தி பேசத்தெரிந்த தமிழர்கள் கூட பலர் இருக்கிறார்கள் என்பதை இந்தியச் சமூகத்துக்குச் சொல்லிக்கொள்ளும் கடமையுடனும் பொறுப்புடனும் எழுதப்பட்ட ஒரு கட்டுரை!!!

அன்றைய திராவிட இயக்கங்கள் "தமிழ் " என்கின்ற ஒற்றைச்சொல் மூலமாக உணர்வு ரீதியாக தமிழர்களை ஒன்றிணைக்க 
முயன்று வென்றனர். 

ஆனால் இன்றைய திராவிட இயக்கங்கள், தங்கள் சுயநலத்திற்காக தமிழர்களின் உணர்வுகளைப் புண்ணாக்கி, 
அதை வணிகம் செய்து, தங்கள் அரசியல் வளர்ச்சிக்காகவும், குடும்ப லாபத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்தி மொழிவியாபாரம் செய்து வருகின்றனர். 

திராவிடத்தை பெயரில் மட்டும் வைத்து தனது தேர்தல் அரசியல் வியாபாரத்தை, இன்று  வட இந்தியத் தலைமையிடம் கொடுத்து, 

முட்டுச் சந்திற்குள் மொழியின் மொத்த வியாபாரம் செய்யும் முன்னேற்றக் கட்சிகளுக்கு இடையே,

நாமும் சின்னதாய் சில்லரை வியாபாரம் செய்யலாமே என்று வணிக அரசியல் செய்ய வந்த 
"நாங்க மட்டுமே தமிழர்கள்" போன்ற கட்சிகள் இதை "தமிழ்ச் சர்வாதிகார" நோக்கில் பயன்படுத்தத் துவங்கினர். 

தமிழர்களின் அறிவு மிகவும் விரிவானது. 
அது நல்லவைகளை தேர்ந்து அல்லவைகளை நீக்க வல்லது. 

"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு" என்று சொல்லிய அறிஞர்களைக் கொண்டது. 

'கெடல் எங்கே தமிழர் நலம் அங்கே கிளர்ச்சி செய்' என்று புரட்சிக்கு வித்திட்ட வீரமரபு கொண்டது. 

எனவே டி சேர்ட்டில் தமிழுணர்வை சேர்த்து தமிழர்களை ஒன்றிணைக்க நினைக்கும் வட இந்திய தேர்தல் நிபுணர்களின் அரைகுறை பேச்சில் ஆர்வம் கொள்ளாமல்,

நல்ல தமிழர்கள் விரும்பினால் அமைதியாக இந்தி படிக்கலாம்! இன்னும் பல மொழிகள் கற்கலாம். தவறில்லை!

" தமிழன் என்பது தகுதி அல்ல அது அடையாளம் மட்டுமே" என்று சொல்லும் தலைவர்களைக் கொண்டது நம் தமிழ் நாடு!! அவர் சொல் கேட்போம் .

மெல்லச் சாக, தமிழ் என்ன சமஸ்கிருதம் போல கடவுளின் மொழியா? 

இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்

இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!

இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!!!

தமிழ்த்தீ பரவும்...... 
ஆனால் எவரின் வணிகமோ வயிறையோ  வளர்க்க அல்ல, தமிழர்களின் வளம் வளர்க்க மட்டும் தான்!! 

பின் குறிப்பு:- 

வினா: அன்றைய திராவிட இயக்கங்கள் இன்றைய திராவிட இயக்கங்கள் வித்தியாசம் என்ன?

விடை: இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி காங்கிரஸ், அப்படின்னு இன்னிக்கும் பல பேரு நெனைக்கிற மாதிரியான ஒரு முட்டாள் தனம்!!!

காமத்தீயும் வாய்ப்புண்ணும்

இவ்வுதட்டுப் போரில் 
உன் 
நாவினால் 
சுட்ட வடு
உள்ளாறும்,
ஆறாதே...
காமத்தீயினால் 
சுட்ட புண்! 

#முத்தக்குறள் 

Sathya Moorthy 

Cupidbuddha

 #cupidbuddha

பெண் லயனுடன் Online

"ஆன்லைனில்" 
இல்லாத போது 
என்ன செய்வாய்?
என்று கேட்டாள்.....

"பெண் லயன்" 
உன்னிடம் 
"ஆண் லயன்" 
நான் 
கதையாடிக் கொண்டிருப்பேன் 
என்றேன்!! 

நெட்ஒர்க் இல்ல 
"போடா" 
என்றாள்! 

"போடா" 
என்றவுடன் 
சரி 
எதோ 
தேர்தல் பிரச்சாரம் போல 
என்று எண்ணி,

 "இடைத்" தேர்தலில் 
சீட் வாங்கலாமா 
என்று 
"டீ- சேர்ட்டை" 
கழட்டி 
போட்டு விட்டு 
வந்தேன்! 

#குண்டக்கமண்டக்க #cupidbuddha #campaign #politics #dravidianmodel #antiaryan #HindiSpeakingTamilan #poda #election

காமக்காரி....

உனது 
ஒவ்வொரு தொடுதலிலும்...
ஒரு 
தேர்ந்த 
பச்சை குத்துபவளின் நேர்த்தியும்,

பிரசவம் பார்க்கும் 
கிழவியின் கூர்மையும், 

க்கவிதை எழுதுபவளின் கிளர்ச்சியும்,

க்காமக்காரியின் 
முதிர்ச்சியும் ஒருசேர உணர்கிறேன்!

காதலைப் புனிதம் 
என்று பிதற்றித்திரியும் காமப்பிசாசுகளிடமிருந்து என்னை ரட்சியும் 
எந்தன் பர தேவதையே....

காமப்புனலிடமிருந்து என்னை நான் 
காத்துக் காதலித்துக் கொள்கின்றேன். 

#pic #courtesy priya anand

இருட்டுக் குடுவை.….

எனது
பெரும்
ரகசியங்களடங்கிய 
ஒரு 
இருட்டுக் குடுவையை 
உன்னிடத்தில் 
பத்திரப்படுத்தி வைத்திருக்கச் சொல்லிச் சென்று,
மறந்து 
திரும்பிய,
அக்கணத்தில் 
பால்வெளியின் 
ஒரு 
மூலையோரத்தில் 
பிரபஞ்சரகசியம் 
எனைப் பார்த்து 
எக்களித்ததைக் கண்டு
என்னவென வினவ,
விடையறியா 
வினாக்களுக்கு
"பிரபஞ்ச இரகசியமென்று" 
இன்னும் 
சொல்லித்திரியும் 
"எத்தர்களுக்கு" 
மத்தியில்
"சித்தன்" 
நீயொருவன் தான்
சிவனென்றுணர்ந்தவனென்றிருந்தோம்....
அய்யகோ 
நீயோ 
உனது 
ரகசியங்களை எப்படி 
இருட்டுக் குடுவையிலடைத்தாயென்ற 
பிரபஞ்சத்தைப் பார்த்துக் கேட்டேன், 
"பரிமாற்றமெனும்" 
பேரிலோ 
அல்லது 
"பரவலாக்கம்" 
எனும் பெயரிலோ 
உனது 
பிரபஞ்ச ரகசியத்தையும் 
எனது 
குடுவை ரகசியத்தையும் அவ்விருட்டுக் குடுவையிலிருந்து உடைத்தெறிவோமா 
எனத் திருப்பிக் கேட்க, 
பதிலறியா 
திகைப்பிலிருந்த பிரபஞ்சத்திடம் 
சொன்னேன்,
என் ரகசியமும் 
உன் ரகசியமும் 
ஒன்றேயென.....
பட்டென கிட்டிய ஞானத்தையெடுத்துக் கொண்டு 
புதிய 
பால்வெளியைத்தேடி 
விர்ரென்று 
கருந்துளைக்குள் 
புகுந்து மறைய, 
நான் 
இப்பொழுது 
உன் 
வீடிருக்கும் 
முட்டுச்சந்தினுள் நிற்கின்றேன் 
என் 
இருட்டுக்குடுவையை 
வேண்டி......

ப்ரம்மம் பெண்ணாஸ்மி....

உனது 
இரவுநேர 
உடுக்கையை 
படுக்கையில்
அகற்றிய பொழுது 
பல விண்மீன்களும், 
சில நிலாக்களும் 
உதிர்ந்தன!!! 

பிரபஞ்சம் பார்த்தேன்,
உன் 
கருவளையத்தை 
விட 
கொஞ்சம் 
சிறியதாகத்தான் 
இருந்தது...

காதலை உடைத்து 
காமத்தை விதைக்க 
இடை புகுந்தேன்...
இறை கண்டேன்! 
பிரம்மம் பெண்ணாஸ்மி!

Popular Posts

Blog Archive

Followers