"முப்பாட்டன் முருகனும் முப்பதாம் தலைமுறைப் பேரனும்"


சின்ன வயசுல திருப்பரங்குன்றம் முருகனுக்கு பால் குடம் எடுத்துட்டு போயிருக்கேன் கிட்டத்தட்ட 6 வருஷம். 

விரதம் இருக்குற சமயத்துல ஒழுங்க விரதம் இருக்காம போயிட்டா முருகன் வேல்கம்பு வச்சு கண்ண குத்திருவாருன்னு எங்கம்மா என்னைய மெரட்டும்....

பயபக்தியோட விரதம் இருந்து வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா, வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா என்று தினமும் அரோகரா போட்டு.... 

துதிப்போர்க்கு வல்வினை போம்,
துன்பம்போம்,
நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் 
பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், 
நிமலரருள் 
கந்தர் சஷ்டி கவசம் தனை.

அமரரிடர்தீர அமரரம் புரிந்த
குமரனடி நெஞ்சே 
குறி என்று முழு கந்தர் சஷ்டி கவசத்தை முழுங்கியவன் நான்.....

(இன்னிக்கும் almost ஒரு 90% மனப்பாடமா பாடுவேன்.)

வைகையாற்றுக்கரைக்கு அதிகாலை 3-4 மணியளவில் சென்று அங்கு நீராடி பால்குடம் எடுத்து தலையில் வைத்தவுடன் , அரோகாரா அரோகரா சத்தம், மேள தாளம்,கொட்டு, நாதஸ்வரம் என அந்த இடமே ஒரு மாதிரியான Trance நிலைக்கு சென்று புதுவகையான vibration கிடைக்கும், 

பல பேரு இதுல டான்ஸ் ஆடுவாய்ங்க அதோட ரொம்ப பேருக்கு சாமி வேற வரும், 

வேற லெவெல்ல சாமியாடுவாய்ங்க...... 

நமக்கு சாமி வரவே வராது, 

எங்கப்பா சொல்லுவாரு டே சாமியாடுடா இல்லாட்டி தலை மேல பால்குடம் வைக்கமாட்டாய்ங்க அப்படின்னு.... 

நானும் வேகமா தலையாட்டிட்டு அப்படியே லைட்டா ஆட ஆரம்பிப்பேன்...

எங்கப்பா டக்குன்னு இந்தா "சத்யாவுக்கு சாமி வந்துருச்சு" சாமி வந்துருச்சுன்னு சொல்லி பால்கொடத்த எடுத்து தலைல வைக்க சொல்லுவாரு ... 

தலைல வைக்கிறப்ப பூசாரி, அப்படியே "எச்சி தெறிக்க" அரோகராஅரோகரான்னு கத்தி, விபூதிய எடுத்து கொஞ்சம் நெத்தில, கொஞ்சம் கையில, கொஞ்சம் நெஞ்சுல, கொஞ்சம் வாயிலன்னு அப்பி விடுவாப்ல.... 

அதுக்கப்புறம் நான்லாம் வேற லெவல்ல சாமியாடிருக்கேன்...... அப்படியே திருப்பரங்குன்றம் போயி பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் செஞ்சுறுவோம். 

இது போக ஏறத்தாழ ஒரு 20-25 வருடங்களாக வைகாசி விசாகத்தன்று எங்கள் தாத்தா பெயரில் மதுரையில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு பால்குடம்| காவடி எடுப்பவர்களுக்காக  நீர்ப்பந்தல் வைத்திருக்கொண்டிருக்கின்றோம். நீர்ப்பந்தலில் விசிறி, நீர் மோர், பானக்கம், தண்ணீர், கொடுப்பது, காவடி எடுப்பவர்களுக்கு தேவையான வஸ்துக்கள், குளிர்ந்த நீர், பன்னீர் தெளிப்பது போன்று பல வேலைகள் ஜரூராக நடக்கும். 

இப்படி முப்பாட்டன் முருகனிடம் பல பக்தி மார்கங்கள் மூலம் சரணாகதி அடைந்து,

பின்னர் முருகனின் பிரபல்யம் குறைந்து சாய்பாபாக்கள், மாதா அமிர்தானந்த மயிக்கள் என பக்தி மடைமாற்றம் செய்யப்பட்ட ஒரு நல்ல வேளையில்,

நான் கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் சொல்லும் "இறைக்கும்" எனக்குமான இடைவெளியினை கூட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். 

அதற்கு பிறகு வேறு கதை!!

நிற்க!

இவ்வளவு ஒரு நீண்ட நெடிய பதிவுக்கான காரணம் என்னவென்றால்..... 

முருங்கைக்காய்க்கு "முருங்கைக்காய்" அப்படின்னு பேர் வர்றதுக்கு என்ன காரணம் அப்படின்னு ஒரு ஆராச்சியில் இறங்கியபொழுது அது "முருகன் காய்" என்று சொல்லி அதற்கு ஒரு பெரிய பின்கதை கேள்விப்பட்டேன். 

அந்தக்கதையை எழுதலாம் என்று பல நாள் முயன்று இந்த வாரம் எழுதலாம் என்று இருந்தேன். 

ஆனால் "கந்தர் சஷ்டி கவசத்திற்கும்" காப்பிரைட் மற்றும் தமிழின சிறு தெய்வமான முருகனையும் "இந்துக்கள்" சொந்தம் கொண்டாட துவங்கிவிட்டனர் என்று பதிவுகள் மூலமாக தெரிய வந்தது

எனவே முப்பாட்டன் முருகனை இந்துக் கடவுளான கார்த்திக்கிடமும் விநாயக்கிடமும், ஷிவ்ஜீ & பார்வதி ஜீயிடம் இழந்து நிற்கும் " முப்பதாம் தலைமுறைப் பேரனாய்" அந்த முருகன் காய் பற்றிய கதையை பின்னாடி ஒரு நாள் எழுதலாம் என்று மனதை தேற்றிவிட்டேன்.

0 comments:

Popular Posts

Blog Archive

Followers