சிங்கச் சித்தன்!!!

சிங்கம் சேர்த்து வைத்துக் கொள்வதில்லை,
சிங்கம் தனது தேவையை விட அதிகம் உண்ணுவதில்லை.....

ஏனெனில்
சிங்கம் தினமும் 
வேட்டைக்குப் போகும்!

சிங்கம் விட்டுச் சென்ற 
மிச்சத்தை 
நக்கிச் சாப்பிட்ட பின் 
சிறுநரிகள் 
தந்திரம் யோசிக்கும்......

எச்சில் மிச்சத்தை 
சேர்த்து வைக்கலாமா?
என்று 
திட்டம் தீட்டும்...... 

சேர்த்து வைத்ததை 
சேமிப்பு 
என்று 
பெயர் சூட்டலாமா 
என 
மூளை கசக்கும்....

எச்சில் சேமிப்பை, 
வழியற்ற 
வறிய 
சிற்றெலிகளுக்கும் 
சிறு காக்கைகளுக்கும் 
கந்து வட்டிக்குக் கொடுக்கலாமா?
என்று கனவு காணும்...

வட்டி கட்ட முடியாத 
பின் அவைகளை அடிமையாக்கலாமா 
என்று ஆலோசிக்கும்....

அப்படி 
தன்னிடம் கையேந்தும் காக்கையையும் சிறு எலியையும் தனக்கு சேவகம் செய்யவும், 
தனக்கு சாதகமாக 
பொய்யை உண்மையாகவும் 
உண்மையை பொய்யாகவும் 
திரிக்கச் செய்யும். 

சிங்கம் விட்டுச் சென்ற 
எச்சிலைத் தின்று 
தினவெடுத்த 
தந்திர நரிகள் 
சிங்கத்தையே 
கேள்வி கேட்கும்.... 

நீ ஏன் 
சரியான நேரத்திற்கு 
வேட்டைக்கு செல்லவில்லை? ஒரு நாளைக்கு 
நீ 
இத்தனை முறை 
வேட்டைக்கு செல்லவேண்டும் 
எனக் கட்டளையிட முயலும்....

நாங்கள் நக்கித்திங்க 
நீ தினமும் வேட்டைக்குப் போகவேண்டும் 
என்கின்ற 
உன்னுடைய 
பொறுப்பும் கடமையும் 
உனக்குப்
தெரிகிறதா? புரிகிறதா 
என்று 
ஏகவசனத்தில் 
பேசும்!ஏசும்! 

யதேச்சையாக நடந்தவைகளனைத்தையும் சிங்கத்தை சின்னாபின்னப்படுத்தியது போல சித்தரிக்க முயலும் 
சிறு நரிகள் கூட்டம், 

சிங்கமோ யதார்த்தமானது....

அதற்கு 
வேட்டையாட 
மட்டும் தான் தெரியும்!!!
சிறுநரிகளுக்கோ 
சிங்கத்தின் மிச்சத்தை 
நக்கித்திங்க 
மட்டும் தான் தெரியும்!

0 comments:

Popular Posts

Blog Archive

Followers