நகரமும் நாகரீகமும்.....!!!!!

குழந்தை இறந்த
விரக்தியில்
காமத்தை
எமனென்றான்......

சாம்பல்நிற பூனையோ
பறவையோ
எதோ
சரியாகத்தெரியவில்லை
அடிபட்டுத்தெரித்து 
சிதறிகிடக்கும்
ரோட்டில்
பயணிக்கையில்
கனமான மனசு
நம்மை மனிதன் தான் என்று
நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கிறது!!!

விளக்காமாய்
எத்தனைதான் பேசினாலும்
மௌனம்
ஒரே நொடியில்
சின்னாபின்னப்படுத்திவிடுகிறது!!!

கருணையை கிராமம்
சொல்லிக்கொடுத்த 
அதே அளவில்
நகரம்
அதைச்சொல்லிக்கெடுக்கிறது.....

அன்பு
எனக்குத்தேவையில்லை
என்பதை 
மௌனத்தால் சொல்லிச்செல்கிறார்கள்
விரைவூர்தியில்
கைத்தொலைபேசியோடு மட்டும்
வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்


அருகில் அமர்ந்து 
மெதுவடை 
சாப்பிடுபவரை
ஆச்சரியப்படுத்த முனைவதிலே
பாதிநேரம் 
கரைகிறது
உரக்கப்பேசும் 
அடுத்த டேபிள்காரரின் பேச்சு...

நடந்துகொண்டேயிருக்கையில்
சட்டென்று பார்த்துச்சிரிக்கும்
குழந்தையின் கரிசனம்தான்
ஆகப்பெரிய களைப்பையும்
அநாயசமாக போக்கிவிடுகிறது!


மழைச்சாரலில்
நத்தையுடன் 
நடந்துபோவதெங்கே......

ரெஸ்ட்ராண்ட்தோசையுடன்
முட்கரண்டிப்போர்
புரிந்துகொண்டிருப்பவன் தான்
இணையத்தில் தமில்
களாச்சாரம் வால்கவென்கிறான்

என்னைப்பார்த்ததும்
சட்டென்று
தன்மனைவியின் கையையிருக்கி 
அணைப்பவனின்
மிரட்சியில்
நமக்கு நம்மீதே அசூசையாய் இருக்கிறது!!!

பனமரத்துக்கு கீழேயுக்காந்து
கள்ளோ பாலோ
எதுவாகவேண்டுமானாலும் 
குடித்துக்கொள்
பரவாயில்லை.....
காக்கா உன்மேல் 
எச்சமிடாதவரைஇரண்டுமே சரித்தான்....!!!


உக்கிரமாயடிக்கும்
வெயிலைக்கூட சமாளித்துவிடலாம்
வெட்டிநியாயம் பேசி
மொக்கைபோடுபவர்கள் கர்ணகொடூரம்!!!!

லட்சமும் கோடியும் பற்றி
அரற்றிப்பிதற்றியவர் கூட
ஒரு சிங்கிள் டீயை 
ஒன் பை டூ வாகத்தான் 
ஆர்டர் செய்கின்றனர்
முக்குக்கடை
டீக்கடை பாண்டியிடம்!!!

பக்கத்திலிருப்பவரின் 
நிறம் கருப்பாசிவப்பாவென
அறியாதவரில்
பாதிப்பேர்தான்
உலக வறுமைக்காக
போர்க்கொடியெழுப்புகின்றனர்!!!

தவறி விழுந்த 
மூதாட்டியின்
பையிலிருந்து
கீழ்விழுந்த
முட்டைக்கோஸ்
கூட
மனிதாபிமானமற்ற
மக்களைப்ப்ற்றியறிந்திருக்கிறது
அதிகதூரமாகபோய்விழவில்லை
கிழவியின்
அருகிலேயே கிடக்கிறது.....

வீரிட்டு அழும்
குழந்தையை
அடக்க வழி தெரியாமல்
குழம்பிக்கிடக்கும்
அம்மாவிற்க்கு உதவிடயாருமில்லை
ஆனால் முகஞ்சுளிக்க
ஆயிரம் பேர்
ரயில்வண்டியில்....

வயிற்றைத்தள்ளி நிற்கும் 
பெண்ணைப்பார்த்ததும்
தூக்கம்
வந்துவிடுகிறது
பேருந்து இருக்கையில்
அமர்ந்திருக்கும்
அனேகருக்கு.....

கையில் புத்தகமோ
அல்லது செய்தித்தாளோ
ஏதுமில்லை....
யாரின் முகத்தையும் யாரும் பார்க்க 
சற்றே நேரமில்லை
மறந்தும் சினேகப்புன்னகை
ம்ஹ்ம் இல்லவேயில்லை,
கைத்தொலைபேசியே மூளையும் முகமுமாயிற்று
சந்தேகத்திற்க்கு இடமான
நபரையோ அல்லது பொருளையோ
பார்த்தால் நிலைய அதிகாரியிடம்
தெரிவிக்கவும் என 
தானியங்கி குரல் 
சொல்லுவதெல்லாம்
எனக்காகவே 
சொல்லுவதுபோல தோன்றுகிறது
நான்
மட்டும்தான்
வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்
விரைவூர்தியில்....


மனவழுத்தத்தின்
உச்சத்தை
மனிதர்கள்
முகம்தான் மறந்தும்
மறப்பதில்லை....
எப்படியாவது 
காட்டிக்கொடுத்துவிடுகிறது.....

குப்பைவண்டியின்
பாரச்சுமையை
தள்ளமுடியாமல்
தள்ளிவரும்
நபரைப்பார்த்தும்
நகராமல் நிற்கும்
அந்தகுப்பையை யாரெப்பொழுது அகற்றுவார்கள் ???

சிலைப்பிணமாய் தானிங்கு
பலரும்,
சிரிப்பென்றால் கிலோ என்னவிலை 
எந்த செடியில் பூக்கும்???
கொஞ்சம் அதிகமாய் சத்தமிட்டு சிரித்துவிட்டாலோ
அநாகரீகமானவன் என ஒரு தர சான்றிதல் வேறு,
சிரித்ததால் மட்டுமே 
நாகரீகமும் மனிதமும்
வளர்ந்ததென்பதை
யாரிவர்களுக்கு
உரக்கச்சொல்வது!!!
வெறும்காலில் நடந்தால்,
வெறும்கையில் சாப்பிட்டால்
சுகாதாரக்கேடு இங்கு
ஆனால் எப்படி கழுவினார்கள் என்றே தெரியாத ஸ்பூனிலும் ஃபோர்க்கிலும்
சுகாதாரம் வெள்ளையடிக்கிறது!!!!
நாகரீகமென்பது மனிதத்தில் வளர்வது
மனிதத்தில் இருந்து விலகுவதில்லை.....
சுத்தக்காரப்பாப்பாத்திக்கு
சூத்தில் ரெண்டு செரங்கு 
என்பார்கள் எங்களூரில்
இங்கும் அதே கதிதான்
சுத்தமாக இருப்பதினால்
எல்லாபுதுச்சிரங்கும்
இவர்களுக்கு 
உடனடி தாக்கம்!!!

எது எப்படியோ
மனிதனாய் வளர்ந்த்ததில்
மனிதனுக்கு மிகச்சிறப்பு
இனி மனிதனாகவே வளர்ச்சியின்றி 
இருந்துவிடுவான்பதிலும்
இவனின் சிறப்பு!!!
பக்கத்துவீட்ட்க்காரனை தெரியாதென்பதுதான் இந்நகர வாழ்க்கையின் 
முதல் 
புத்தரே வந்த்லும் சிரிப்பதற்க்கு ஆசைப்படு என்றே போதிப்பார் இவர்களுக்கு....

புத்தர் வருவதற்க்காக இருந்த கடேசி போதிமரத்தையுமல்லவா இவர்கள் 
வெட்டிவிட்டார்கள்
போன்சாய் மற்றும் பிளாஸ்டிக்
போதி மரங்களனடியில்
புத்தர் பிறப்பதற்க்கு இவர்கள்
க்ளோனிங்க் ஆராய்ச்சி வேண்டுமானால் செய்யலாம்...

முடியாதவர்களுக்காக 
ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில்
அமர்ந்திருக்கும்
முடிந்தவர்கள் அனைவரும்
அனேகமாக கண்ணை மூடிக்கொண்டே
பயணிக்கின்றனர்!!!!
முதியவரின் அல்லது பிள்ளைத்தாய்ச்சியின்
பார்வையில் இருந்து 
தப்பிப்பதற்க்காக.....

எத்தணைதான் விரைவாக விரைவூர்தி
நகர்ந்தாலும்
வரும்பொழுதுதான் 
நாமிறங்கும்
ஸ்டேசன் 
வருமென்று 
நம்மில் 
பாதிப்பேருக்கு
புரிவதில்லை
இன்றாவது விரைவில்
வந்துவிடுமோ
என்ற நப்பாசையில் பரபரப்பாக......

ஸ்ட்றோலரில்
சினேகமாய்
சிரிக்கும்
குழந்தையிடம்
விளையாடக்கூட 
அச்சமாயிருக்கிறது...
அசலூரில்
நாகரீகம்!!!!

கீழே விழுந்த குழந்தையை
எட்டிப்பிடிப்ப்தற்க்குள்
வெடுக்கென்று
வெறுப்பாக முகம்சுழிக்கும்
அம்மாவிற்க்கு 
தெரியுமா எனக்கும் அதே வயதில்
ஒரு பெண்குழந்தையுண்டென்று???


லட்சமும் கோடியும் பற்றி
அரற்றிப்பிதற்றியவர் கூட
இரு காப்பச்சீனோவிற்க்கு
யார் முதலில்
காசுகொடுப்பது என்ற போரில்
எதிராளியையே 
ஜெயிக்கவைக்கின்றனர்!!!

தனது 
உள்ளாடை
கிழிசலை
மறைப்பதற்க்கும் கூட
லீவைஸ் ஜீன்ஸ்தான்
தேவைப்படுகிறது
நகரத்தில்
பலருக்கும்....


பணக்காரர்களால்
சூழ்ந்திருக்கும்
ஒரு ஏழை நாட்டிலிருந்து 
வந்த 
எனக்கு
ஏழகளால் 
கட்டப்பட்ட
ஒரு பணக்கார நகரம் 
ஒரு 
குழப்பமாகவேத்தானிருக்கிறது!!!

மணியென்ன....?
இந்த இடத்திற்க்கு எப்படி போவது.....???
அண்ணே ஒரு நூற்ருவாய்க்கு சில்லர இருக்குமா.....??
இங்க பக்கத்தில ஒருத்தர் வளத்தியா குண்டா கருப்பா இருப்பாப்லயே 
அவரு வீடு எது....???
அக்கா குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா....??
எதுத்த வீட்டுல ஒரு அம்மாவும் பையனும் இருந்தாங்களே....???
இதெல்லாம் அநாகரீகமான ஒதுக்கப்பட்ட 
கேள்விகள் நகர நாகரீகத்தில்.....

ஜென்னென்பதை
தனக்குள் இருப்பது என்பதை 
தனக்குன்னு மட்டுமே இருப்பது 
என்று தவறாக புரிந்துவிட்டனர்
பலர்!!!!

சந்திப்பபவர்களிடமெல்லாம்
எதோ ஒரு 
எதிர்ப்பார்ப்புடன் 
பழகிப்பேசுவதுதான் 
நகர இயல்பு.....

கைகுலுக்கிவதில் கூட 
கஞ்சத்தனம்
காட்டுவதுதான்
நகர மக்களலுள் 
பெரிய மனது பெரியவர்கள்!!!!!


ரேசிலோடும் 
குதிரைப்போலவே
வெறும் கொள்ளிற்க்காக 
கோல்ட்மெடல் வாங்கத்தான்
பலரும் துடிக்கிறார்கள்!!!!

மலம்கழிக்கையில் கூட 
கையில்
கேட்ஜட்டுடன் தான் இருப்பேன்
எனச்சொல்வதுதான்
நகரத்தார் வாழ்வியல்!!!

வைஃபை ப்ளூடூத்,ஸ்கைப் ஃபேஸ்புக் ட்விட்டர்,கூக்ள்,
தெரிந்த அளவிற்க்கு
கசிந்தழுகும்
பக்கத்து சீட்டுக்காரனின் வலியறியாமல் 
தானிங்கு
பலருக்கு
வாழ்க்கைப்பயணம்
ரயில் வண்டியில்....

பிள்ளையின் பெயரைக்கூட அப்பா ஆத்தாவிடம் 
கேளாமல்
கூக்ளிடம் கேட்பவன் தான்
நகரத்தான்....

எத்தனையோ எவ்வளவோ டவுன்லோடு
செய்கிறாய்
ஊரிலிருக்கும் அப்பனுக்கு பேத்தியின் புகைப்படம்
அப்லோடு செய்கிறாய்
அக்கேட்ஜட்டில்
அன்பை, உணர்வை அப்லோடு டவுன்லோடு செய்ய முடியுமா
என்றால் 
"ஙே" என்கிறான்!!!

எமோசனைக்கூட 
எமோட் ஐகானில்
காண்பிப்பவனிடம்
உணர்ச்சி 
உயரிய 
மனித இயல்பு என்று 
யாரெப்படிச்சொல்வது.....???

ஆர்கானிகென்கிறான்
ப்பெஸ்ட் ஃப்ரீயென்கிறான்
டே அதைத்தானடா எனது
தாத்தனும் முப்பாட்டனும்
உணவு என்றான்....??? 


தக்காளிய எந்த மெசினில் 
செய்ராங்கன்னு எம்பொண்ணு கேக்குறான்னு
சிரிக்கும்
அப்பனின் 
பொடனியில்
சப்பென்று ஒரு அடி அடிக்கலாமென்றுதான்
தோணுகிறது
ஆனாலும்
நகர நாகரீகம்
அச்சப்படுகிறது!!!


சுள்ளென்றடிக்கும் வெயிலும் 
எரிச்சல்
சில்லென்றிருக்கும் மழையும்
எரிச்சல்
கோதும சாப்பிட்டா க்ளூட்டன்
பழம் சாப்பிட்டா நேச்சுரல் சுகர்
பால் குடிச்சா கேலரி
அரிசி சாப்பிட்டா கொழுப்பு
த்தா இப்படியொரு
உடம்பை
வச்சு வாழுறதுக்கு செத்துபோய்ரலாம்லடா நீ 
அப்படின்னு 
சொன்னா கருணக்கொலை 
சட்டவிரோதமென்கிறான்
சிரித்துக்கொண்டே....

மை டாட் வாஸ் அ நைஸ் மேன்
இப்படி சொல்பவனின்
அப்பா
ஏதோவொரு ஆசிரமத்தில்
இருப்பதாகபடுவது எனக்கு மட்டும்தானா....

காதுகுத்து,
சடங்கு
நிச்சயதார்த்தம்
நலுங்கு
எழவு
சும்மா இங்கன வந்தேன்
அதான் அப்படியே 
பாத்துட்டு போகலாம்னு வந்தேண்ணே
இந்த வார்த்தைகலெல்லாம் 
மறந்து போயி
ஆஃபிஸ் டின்னர்
ஃபண்ட் ரைசிங் பார்ட்டி
லேடிஸ் நைட்
ஸ்டேக் பார்ட்டி
கிட்டி பார்ட்டி
ஹேப்பி ஹவர் ப்ரொமோசன்
என்ற வார்த்தைகளுடனான 
பரிச்சியம் 
ஏற்ப்பட்டுவிட்டதா...
சரி இனி 
நகரத்தில் 
வாழத்தகுதியானவன்...

0 comments:

Popular Posts

Blog Archive

Followers